search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைலாய யாத்திரை"

    கைலாய யாத்திரை சென்ற 1,500 இந்தியர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். #KailashMansarovar #Pilgrims #NepalRescued
    புதுடெல்லி:

    சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பகுதியில் கைலாய மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட ஏராளமான பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

    இந்த ஆண்டும் கடந்த சில வாரங்களாக மானசரோவருக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

    மானசரோவர் அமைந்துள்ள திபெத்திய பகுதியிலும், அங்கு செல்வதற்கான நேபாள நாட்டின் மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.



    இதன் காரணமாக மானசரோவருக்கு சென்ற இந்திய பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக நேபாள நாட்டின் சிமிகோட் பகுதியில் 525 பக்தர்களும், ஹில்சா என்னும் இடத்தில் 550 பேரும், திபெத்திய பகுதியில் 500 பக்தர்களும் என 1,500-க்கும் மேற்பட்டோர் மோசமான வானிலை காரணமாக தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக புனித யாத்திரை மேற்கொண்ட வயதான ஆண்களும், பெண்களும் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டுள்ள இந்திய பக்தர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று நேபாள அரசுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்திய பக்தர்களை மீட்பதற்கு ராணுவ ஹெலிகாப்டர்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

    ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன்



    மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவில், மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டவர்களை பத்திரமாக மீட்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டார்.

    அதில், நேபாளத்தில் சிக்கி பரிதவிக்கும் பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் உதவிகள் வழங்க நேரடி தொலைபேசி வசதி(ஹாட்லைன்) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஹாட்லைனில் தொடர்பு கொள்வதற்கான போன் நம்பர்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. பிரணவ் கணேஷ்(முதன்மை செயலாளர்-தூதரக அதிகாரி), 977-9851107006, தமிழில் அறிந்து கொள்ள ஆர்.முருகன், 977-9808500642 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பக்தர்களை மீட்பது தொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் நேபாள்கஞ்ச் மற்றும் சிமிகோட் பகுதிகளுக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது. யாத்திரை சென்ற பக்தர்களுடன் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்களுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.



    சிமிகோட்டில் தங்கியிருக்கும் வயதில் மூத்தோர் அனைவருக்கும் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்படுகிறது. இதேபோல் ஹில்சா பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரும்படி அங்குள்ள போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிமிகோட் பகுதியில் சிக்கித் தவிக்கும் பக்தர்களை மாற்றுப்பாதைகளில் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்த பாதைகள் அனைத்தும் சிமிகோட்-நேபாள்கஞ்ச் பாதையைப் போன்றே சிக்கலானது என்றும் கூறப்படுகிறது.

    மேலும் ஹில்சா பகுதியில் மற்ற இடங்களை விட மிகவும் மோசமான வானிலை நிலவுவதால் இப்பகுதியில் இருந்து விரைவாக இந்திய பக்தர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் சிமிகோட், ஹில்சா பகுதிகளில் நேற்றும் மோசமான வானிலை காணப்பட்டது. இதனால் இந்திய பக்தர்களை மீட்பது சற்று கடினம் என்று கருதப்பட்டது.

    எனினும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்காக 7 சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழர்களுடன் சிமிகோட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்ட ஒரு விமானம் பிற்பகல் 1.55 மணிக்கு நேபாள்கஞ்ச் வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அவர்கள் காரில் அழைத்து செல்லப்பட்டனர். காத்மாண்டுவில் சிறிது ஓய்வுக்கு பின்னர், அவர்கள் சாலைமார்க்கமாகவே உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு புறப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்தனர். எனவே விரைவில் அவர்கள் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மானசரோவருக்கு மாண்டியா, ராமநகரா, மைசூரு ஆகிய பகுதிகளில் இருந்து 290 பேர் கைலாய யாத்திரை சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    நேபாளத்தில் தவிக்கும் இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தனது மாநிலத்தின் சார்பில் பிரதிநிதிகளை நேபாள்கஞ்ச் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

    இதற்கிடையே, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன்(வயது 69) இந்த பயணத்தின்போது உயிர் இழந்தது, தெரிய வந்துள்ளது. இவர், தனது மனைவியுடன் மானசரோவருக்கு கடந்த மாதம் 18-ந்தேதி பயணம் மேற்கொண்டார்.

    நேற்று முன்தினம் மானசரோவரில் கிரிவலம் சென்றபோது கடும் குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமச்சந்திரன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    அவரது உடல் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் கேரளாவைச் சேர்ந்த லீலா(வயது 56), ஆந்திராவின் சத்தியலட்சுமி ஆகிய 2 பெண்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    லீலா, மானசரோவருக்கு சென்றுவிட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பியபோது இறந்துள்ளார். கேரளாவில் இருந்து யாத்திரை சென்ற 40 பேரில் இவரும் ஒருவர். ஆந்திர மாநிலத்தின் சத்திய லட்சுமி திபெத்திய பகுதியில் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
     #KailashMansarovar #Pilgrims #NepalRescued #Tamilnews 
    ×